Pages

Monday 29 March 2010

இலங்கை முஸ்லிம் சினிமா 01 & 02

முன்னோடிகளும் பங்களிப்பும்

இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகமும் வரலாறும் எவ்வளவு தொன்மையானதோ அதே போன்றது தான் அவர்களின் சினிமாத் துறைப் பங்களிப்பும். தனித்துவமாக உருவாக்க முடியாது போனாலும் முன்னையோரின் வியப்பூட்டும் பங்களிப்பும் அவர்களின் துணிச்சலான முன்னெடுப்புக்களைப் பார்க்கும் போது நமக்கும் அக்கலை மீது ஆர்வம் ஏற்படுவதோடு எமக்கேயுரிய பண்பாட்டுத் தனித்துவத்தோடு கையாள வேண்டும் என்ற பிரக்ஞையும் ஏற்படுத்திக் கொள்ள முடிகிறது.

ஒரு பண்பாட்டு வெற்றிடத்திலிருந்து எந்த ஒரு கலையும் தோன்றி வருவதில்லை. திரைப்படமும் இதற்கு விதிவிலக்கானதல்ல. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி வரை மிகுந்த செல்வாக்குடன் இயங்கி வந்த பார்ஸி தியேட்டர் பாரம்பரியத்திலிருந்து ஒட்டு மொத்த இலங்கை சினிமா வரலாறும் தொடங்குகின்றது என்பது மிகத் தெளிவான வரலாறாகும்.

இலங்கை சினிமாவுக்கான முஸ்லிம்களின் பங்களிப்பு தொன்னூறு வருடங்களுக்கு முன்பு தொடங்குகின்றது. பார்ஸி நாடகக் கம்பனிகளின் வருகையுடன் அது ஆரம்பமாகின்றது எனலாம். 1920 ம் ஆண்டு அளவில் இந்தியக் கதை ஒன்றைத் தழுவி ராஜகீய விக்ரம என்ற பெயரில் மேடையேற்றி வந்தார்கள்.

வெள்ளவத்தை பிளாஸா தியேட்டரின் உரிமையாளராக இருந்து பல வெளி நாட்டுப் படங்கள் இறக்குமதி செய்து காண்பித்து வந்தது. ஜீ.ஏ. நூர் பாய் இந்நாடகத்தை சிங்களப் படமாக உருவாக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. அக்காலத்தில் சினிமா மீது ஆர்வம் கொண்ட இளைஞர் ஒருவர் கொழும்பு ஆனந்த கல்லூரியில் பயின்று கொண்டிருந்தார். இவருக்கு இந்தப் படத்தில் கதா நாயகப் பாத்திரம் வழங்கப்பட்டது. அந்த இளைஞர் தான் பின் நாளில் பிரபல அரசியல்வாதியாக விளங்கிய என். எம். பெரேரா ஆவார். ராஜசீய விக்ரம என்ற படத்தில் டவர் ஹோல் நடிகர்ளான அல்பர்ட் பெரேரா, ரெஜினோல் பெரேரா, பேர்சி பெரேரா, போன்றோர்களும் நடித்தார்கள். மெளனத் திரைப்படமாக உருவான இப்படம் இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் மட்டுமே திரையிடப்பட்டது. இதன் பிரதியொன்றை இலங்கைக்கு கொண்டு வரும் வழியில் தீக்கரையாகி விட்டதாம். இந்தத துரதிஷ்டமான சம்பவத்தினால் முதலாவது சிங்களப்படத்தை இலங்கையர்களால் பார்க்க முடியாமல் போய்விட்டது.

(தொடரும்)

இலங்கை முஸ்லிம் சினிமா 02: முகமட் மஸ்த்தான்

சிங்களப் படங்களை உருவாக்கியவர்களில் இன்னுமொரு முஸ்லிம் கலைஞர் முக்கிய இடத்தைப் பெறுகின்றார். பல சிங்களப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ததுடன் சில படங்களை நெறியாண்ட முகமட் மஸ்த்தான் தான் அவர்.

இந்தியரான இவர் சிங்களச் சினிமாவுக்கு செய்த சேவை காரணமாக கெளரவப் பிரஜை அந்தஸ்த்து வழங்கப்பட்டு இலங்கையிலேயே வாழ்ந்து வந்தவர்.

இவர் ஆரம்பத்தில் தென்னிந்தியப் படங்களில் பலவற்றுக்கு ஒளிப்பதிவாளராக கடமையாற்றினார். பின்பு பல சிங்களப் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக கடமையாற்றி பின் நாளில் இலங்கையில் உருவான பல ஒளிப்பதிவாளருக்கு குருவாகவும் விளங்கினார். முகமட் மஸ்த்தான் இலங்கையில் நாவலப்பட்டியில் வாழ்ந்து வந்தார். அசோகமாலா சிங்களப் படத்துடன் இவரது சிங்களப் படத் தொடர்பு ஆரம்பமாகியது. இப்படத்திற்கு இவரே ஒளிப்பதிவாளராக விளங்கினார் . ரீ.ஆர். சுந்தரம் இயக்கிய “சுஜாதா“ படத்துக்கும் இவரே ஒளிப்பதிவாளர். அப்பொழுது இவரது படப் பிடிப்புகள் பலராலும் பாராட்டப்பட்டன.

முகமட் மஸ்த்தான் முதலாவது இயக்கிய சிங்களப் படத்தின் பெயர் “சுகுமலி“ என்பதாகும். இது 1957ம் ஆண்டு திரைக்கு வந்தது. இலங்கைத் தமிழரான றொபின் தம்புவே இதன் தயாரிப்பாளர் அதட்ட வெடிய ஹெட்ட ஹொந்தாய“, “உடரட்ட மெனிக்கே“, “அல்லப்பு கெதர“ , “ஆத்ம பூஜா“ , “தீவரயோ “, என்பன மஸ்தானால் தயாரிக்கப்பட்ட எட்டுச் சிங்களப் படங்களாகும்.

அக்காலத்தில் ஸ்டூடியோவுக்குள்ளேயே படப் பிடிப்புகள் நடாத்தப்படும் . ஆனால் “தீவரயோ ‘ படத்தை உருவாக்க மஸ்த்தான் நடுக்கடலுக்கே சென்று படப் பிடிப்பை நடத்தினார். துணிச்சல் மிக்க காட்சிகளைப் படத்தில் சேர்த்தார்.

இன்று வரை இலங்கை சினிமா உலகத்தில் கடமையாற்றும் கலைஞர்களில் பலர் மஸ்தானைக் குருவாகக் கொண்டு உருவாகியவர்களே.

மஸ்தான் உருவாக்கிய பாணியே தொடர்ந்து வருகிறது என்பதை விமர்சகர்கள் ஏற்றுக் கொள்வார்கள். சிங்கள சினிமாவில் ஒளிப்பதிவுத் துறையில் மஸ்தான் மன்னனாக விளங்கினார். சினிமாவில் குணரத்தினம் தயாரித்த பெரும்பாலான படங்களுக்கு எம் மஸ்தானே இயக்குனர்.

முகமட் மஸ்த்தானின் பூர்வீகம் இந்தியாவில் திரு நெல்வேலிக்கு அருகிலுள்ள மேலைப் பாளையாகும். ஆனால் அவர் 1915ம் ஆண்டு நாகர் கோவிலில் பிறந்தார். இவரது குடும்பத்தினர் வியாபாரிகளாவர். இலங்கையிலும் அவர்கள் தமது மேற்கொண்டனர். குழந்தைப் பருவத்திலேயே மஸ்த்தான் இலங்கைக்கு வந்தார். இருபது வயதில் மீண்டும் இந்தியா திரும்பினார் . சென்னை வந்த இவருக்கு மாமனார் நாகூர் மெரினா ஸ்ரூடியோ என்ற புகைப்பட நிலையத்தை அமைத்துக் கொடுத்தார் . இந்த ஸ்ரூடியோவில் தான் மஸ்தான் என்ற ஒளிப்பதிவாளர் உருவானார். இலங்கையிலும் இந்தியாவிலும் பல சிங்கள, தமிழ் படங்களை ஒளிப்பதிவு செய்து நெறியாண்ட மஸ்தானுக்கு அதுதான் முதற் பயிற்சிக் களமாக அமைந்தது.

அவர் சினிமாவுடன் தொடர்பு கொண்டதையும் இலங்கையில் பல சிங்களப் படங்கள் ஒளிப்பதிவு செய்து இயக்கியதையும் பற்றி இப்படிக் கூறுகிறார்.

“1938ம் ஆண்டு நியூடோன் ஸ்ரூடியோ ஆரம்பிக்கப்பட்டது. அதில் நான் கமரா உதவியாளராகச் சேர்ந்தேன் . அங்கு நான் புகைப் படங்களையும் எடுத்து வந்தேன். சித்ரன் பானர்ஜி எனது குருவாக இருந்தார். அவரிடம் பல காலமாக உதவியாளராக இருந்தார் . இவரும் நியூடோன் ஸ்ரூடியொவின் பங்காளராவார். 1940ம் ஆண்டு “ ராதா ரமணா“ என்ற படத்தில் முதன் முதலாக ஒளிப்பதிவாளரானேன்.

1944ல் ஜூபிட்டர் பிக்சர்ஸ் ஆரம்பமானது இங்கு நானே பிரதான ஒளிப்பதிவாளராக நியமிக்கப்பட்டேன். அங்கு தொடர்ந்து 12 வருடங்கள் கடமையாற்றினேன். சிறிமுருகன், மர்மயோகி, வேலைக்காரி, மோகினி போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தேன். 1951ம் ஆண்டு சேலம் மொடேர்ன் தியேட்டர் ஸாரின் “சர்வதிகாரி“ என்ற படத்தில் கடமையாற்றினேன். வளையாபதி படத்தை முதன் முதலாக இயக்கினேன். அதன் பின்பு சுயமாகப் படங்களை இயக்கத் தொடங்கினேன். அவ்வாறு சுயமாக நான் முதலில் இயக்கிய படம் ஹரிச்சந்திரா என்பதாகும் “ என்று மஸ்த்தான் கூறினார்.

இதன் பின்பே மஸ்த்தான் இலங்கைக்கு வந்தார். 1962ல் இலங்கை வந்த மஸ்த்தான் கே. குணரத்தினத்தின் விஜயா ஸ்ருடியோவில் பணியாற்றத் தொடங்கினார். பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். பல சிங்களப் படங்கள் இவரால் இயக்கப்பட்டன. கிட்டத்தட்ட எட்டு படங்கள் இவரால் இயக்கப்பட்டன. இவரைக் குருவாகக் கொண்டு பல கலைஞர்கள் உருவானார்கள். வீ.வாம தேவனும் அன்ரன் கிறகரியும் முக்கியமானவர்களாவர் . தொடர்ந்து ஆறு வருடங்கள் இலங்கையில் இருந்த மஸ்த்தான் 1968ல் இந்தியா திரும்பினார்.

அங்கு கோபால கிருஷ்ணன் கற்பகம் ஸ்ரூடியோவில் சில படங்களுக்கு ஒளிப்பதிவாளராகச் செயற்பட்டார் . சுபதினம் , குலவிளக்கு, என்பன அவற்றில் சில படங்களாகும் . பாலாஜி எடுத்த படங்கள் பலவற்றிலும் ஒளிப்பதிவு செய்தார் . “ எங்கிருந்தோ வந்தான் “ நீதி, திருடன், ராஜா, என்பவை அப்படங்களில் சிலவாகும்.

மஸ்தான் கடைசியாக ராம பக்த ஹனுமான் என்ற மலையாளப் படத்தை இயக்கினார். இவர் ஒளிப்பதிவு செய்த பல வண்ணப் படங்களுக்குப் பரிசும் கிடைத்துள்ளன. சுவாமி அய்யப்பன், நீதி போன்ற படங்கள் இவருக்குப் பரிசுகளை வாங்கிக் கொடுத்தன.

மூன்று மகன்மாருக்கும் நான்கு மகள்மாருக்கும் தந்தையான மஸ்தான் இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பே திரை உலகை விட்டு ஒதுங்கி இருந்தார்.

ஒளிப்பதிவில் புகழ் பெற்று விளங்கிய மஸ்தான இலங்கையில் பல சிங்களப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ததுடன் பல வெற்றிப் படங்களையும் இயக்கினார். இலங்கைத் திரையுலக முன்னோடிகளில் மஸ்தானும் ஒருவர் எனப் போற்றலாம்.

தமிழும் சிங்களமுமாக மொத்தம் 42 படங்களுக்கு உதவி நெறியாளராக கடமையாற்றிய நீர் கொழும்புத் தமிழர் அன்ரன் கிரகரி என்பவரின் சினிமாப் பிரவேசத்துக்கு உதவியவரும் மஸ்தானே.

ஒரு முறை சிங்களப் படமொன்றின் படப் பிடிப்பை மஸ்தான் நீர்கொழும்பில் வைத்துக் கொண்டார். இந்தப் படப் பிடிப்பை இளைஞன் ஒருவன் பார்த்துக் கொண்டிருந்தான். சனங்களைப் படம் பிடித்த போது இவனும் காட்சிக்குள் அகப்பட்டு விட்டான். அத்திரைப் படம் திரைக்கு வரும் வரை அவனுக்கு நித்திரை வரவில்லை. அந்தக் காட்சியை திரைப்படத்தில் பார்த்த பின்புதான் நிம்மதியாக நித்திரை செய்தான். அவனுக்கு சினிமா ஆசை அதிகரித்து விட்டது. அந்த இளைஞன் தான் நீர் கொழும்பைச் சேர்ந்த தமிழ் சகோதரர் அன்ரன் கிரகரி இவர் நேரே டைரக்டர் எம்.மஸ்தானிடம் சென்றார். தனக்கு சினிமாவின் மீதான தனது ஆர்வத்தை மஸ்தான் புரிந்து கொண்டார். ஆங்கில தமிழ் மொழி பெயர்ப்புச் செய்ய முடியுமா ? என்று கேட்டார். அதற்கு அன்ரன் கிரகரி ஆம் என்றார். தனது உதவியாளர் மூலம் கிரகரியின் விசாலத்தை மஸ்தான் எழுதிக் கொண்டார். இரண்டு மாதத்தின் பின் கிரகரிக்கு அழைப்பு வந்தது.

ஹெந்தளை விஜயா ஸ்ரூடியோவில் என்னை வந்து சந்திக்கவும் – மஸ்தான் என்ற இந்த அழைப்புக் கடிதத்தை ஹியூகோ மாஸ்டர் கொண்டு வந்து கொடுத்தார்.

கிரகரி மஸ்தானைச் சென்று சந்தித்தார். கே.குணரத்தினமும் எம். மஸ்தானும் சேர்ந்து உரையாடி கிரகரிக்கு ஒரு வேலை போட்டுக் கொடுத்தார்கள். கனிஷ்ட மொழிபெயர்ப்பாளர் ( junior translator ) என்பது தான் அந்தப் பதவி. 1964 ஆண்டு ஜூன் மாதம் 04ம் திகதி இவருக்கு இந்தப் பதவி கிடைத்தது.

இப்படித்தான் மஸ்தானின் வழிகாட்டலில் தொழில் பயின்றார் அன்ரன் கிரகரி. தன் குருவான எம்.மஸ்தான் பற்றி அன்ரன் கிரகிரி பின்வருமாறு சொன்னார்.

“என் சினிமா வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு காரணமே என் குரு மஸ்தானின் ஆசிர்வாதம் தான். அவரிடம் சினிமா நுணுக்கங்களைப் பயின்றவர்கள் பலர். அவர்களில் நானும் ஒருவர் என் குரு எம். மஸ்தானின் அழகிய புகைப்படம் ஒன்று என் வீட்டில் இருக்கிறது. ஆண்டவனுக்கு அடுத்த இடத்தில் நான் மஸ்தானின் படத்தையே நான் பூஜிக்கிறேன்.

“என் படப்பிடிப்புகள் ஆரம்பமாகும் பொழுது மஸ்தானின் படத்தை வணங்கி விட்டே வேலைகளை ஆரம்பிப்பேன்“ என நன்றிப் பெருக்குடன் கூறுகிறார் கிரகரி.

(தொடரும்)

Br. ABM Idress (Plus*)

*(Holly Quran says:...the man was created weak....4:28)
Ends/

No comments:

Post a Comment